Tuesday, December 28, 2010

வதைகளுக்குள்ளிருந்து வாழ துடிக்கிறது வன்னி மண்...

எழுதுகோல் சற்று எழுத்துக்கள் தேடியே எழுத விளைகின்றது. வன்னி, இது நெருப்பின் மறுபெயர் வந்தோரை வாழ வைத்த வன்னிமண் வலிசுமந்து தினமும் வதைபட்டு நிற்கிறது. துயர்படியும் வாழ்க்கை தினமும் என்றான பின்பும், இடர்நிறை நிகழ்வுகளுக்கு பின்னும் வாழத்துடிக்கிறது வன்னியின் உறவுக்கொடிகள்.

செப்பனிடப்பட்ட பாதைகள் வழியே, செந்நிற ஆட்சியாளர்களின் செப்பனிப்படாத மனங்களுக்குள் சிதைக்கப்பட்டபடியே அமைதியாக வாழ்வு தேடுகிறது வன்னி மண்.


சோலைகள் நிறைந்த வனப்பு நிறை வனங்களும், பூஜைகள் நிறைந்த ஆலயமணியோசையும், ஆங்காங்கே குச்சொழுங்கைகளில் கால்மிதிக்கும் மிதிவண்டிக்காதலரும், இல்லாது சிரிப்பின் சின்னங்கள் அழிக்கப்பட்ட வன்னி சோவையிழந்து கிடக்கிறது.

சொந்தங்கள் இழப்பின் சோகம் ஒருபுறமும், முந்திநம் முகவரிசொன்ன எம் வீடுகளின் இடிபாடுகளும், வந்தவரை எல்லாம் வாருங்கள் என்று வரவேற்று உபசரிந்த அந்த நாட்களை தொலைத்த துயரும் இன்றும் மனங்களை விட்டகலாத போதும் வன்னிமண் மீண்டும் எழுந்திருக்க நினைக்கிறது.



கரம் தாருங்கள் எழுந்திருக்க என்று உறவுகைள உரிமையோடு அழைக்கிறது. உண்மையில் உதவி தேவையானவர்களும், உதவப்பட வேண்டியவர்களும் வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களே! ஆனாலும் மற்றைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வன்னி மக்களுக்கு கிடைப்பது வெறும் 10 சதவீதமே!

எம் புலம்பெயர்வாழ் உறவுகளே!
உரிமையுடன் கேட்க்கும் அவர்களுக்கு வாஞ்சியுடன் அள்ளிக்கொடுங்கள் என்று எழுதி முடியவில்லை. நீங்கள் அள்ளி அள்ளி கொடுத்தவற்றை நாம் மறக்கவில்லை. ஆனாலும் இயலுமானவரை உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் உதவுங்கள் 'சிறுதுளி பெருவெள்ளம்" அது மழைக்குமட்டுமல்ல... மனதுகளுக்கும் தான்..! மறந்துவிடாதீர்கள்..!

No comments:

Post a Comment